மதுரையில் இருந்து ராமேஸ்வரம் பயணிக்கும் பேருந்தில் மாணவிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு - ஓட்டுநர், நடத்துநரின் மனிதநேயம் பாராட்டுகள் பெறுகிறது!

மதுரையில் இருந்து ராமேஸ்வரம் பயணிக்கும் பேருந்தில் மாணவிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு - ஓட்டுநர், நடத்துநரின் மனிதநேயம் பாராட்டுகள் பெறுகிறது! 










மதுரை: மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில், இரவு நேரத்தில் தனியாகப் பயணம் செய்த மாணவி ஒருவர் பாதுகாப்பாகப் பயணிக்கச் செய்த ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் செயலுக்கு பொதுமக்களின் பாராட்டுகள் குவிகின்றன.


நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் பாம்பன் பாலத்தைக்கடந்தவுடன் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நிறுத்தத்தில் இறங்கத் தயாரான மாணவி, வழக்கறிஞர் படிப்பில் பயிலும் மாணவியாக இருப்பது தெரிந்தது. அந்த நேரத்தில் தனியாக இறங்குவதால் ஆபத்து ஏற்படலாம் எனக் கருதிய நடத்துனர், மாணவியிடம் “இந்த நேரத்தில் உங்கள் பெற்றோர் அல்லது உறவினர் ஒருவர் வந்து அழைத்துச் செல்ல வேண்டும்; இல்லையெனில் இங்கே இறக்க முடியாது” என்று தெளிவாக தெரிவித்தார்.


பின்னர் மாணவியின் பெற்றோருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்கு சுமார் 15 நிமிடங்கள் தாமதமானதால், மாணவியை நிறுத்தத்தில் தனியாக விட மறுத்த ஓட்டுனர் அந்தோணி ராஜ் மற்றும் நடத்துனர் முத்துராமலிங்கம், “பெண் குழந்தையின் பாதுகாப்பு முதன்மை” எனக் கூறி, மாணவியின் உறவினர் வரும்வரை பேருந்தை அங்கு நிறுத்தி வைத்தனர்.


சுமார் 10 நிமிடக் காத்திருப்பிற்குப் பிறகு, மாணவியின் சித்தப்பா வந்து அழைத்துச் சென்றார். அதன் பின்னரே பேருந்து தனது பயணத்தைத் தொடர்ந்தது.


இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய இந்த மனிதநேயச் செயலை சமூக வலைதளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர். ஓட்டுனர் அந்தோணி ராஜ் மற்றும் நடத்துனர் முத்துராமலிங்கத்திற்கு சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்துள்ளன.

Post a Comment

0 Comments